வாய்க்கால் மதகுகளை விரைந்து கட்ட வேண்டும்
நன்னிலம் அருகே விளை நிலங்களின் பாசனத்துக்கு உதவும் வாய்க்கால் மதகுகளை விரைந்து கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம் அருகே விளை நிலங்களின் பாசனத்துக்கு உதவும் வாய்க்கால் மதகுகளை விரைந்து கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்கால் மதகு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி, காக்கா கோட்டூர், சுரக்குடி ஆகிய கிராமங்களுக்கு நீர் பாசனம் தரக்கூடிய தலைப்பு வாய்க்கால் ஆணைக்குப்பத்தில் உள்ளது. ஆற்றில் இருந்து வரும் நீரை இந்த தலைப்பு வாய்க்காலின் அருகில் மூங்கில்குடியில் உள்ள நீர்த்தேக்கி மற்றும் வடிகாலாக பயன்படக் கூடிய வாய்க்கால் மதகில் தேக்கினால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாசனம் பெற முடியும். அதேபோன்று வெள்ள காலங்களில் மதகை திறந்து விட்டால் வெள்ள நீர் வடிந்துவிடும். இந்த நிலையில் அங்கு உள்ள பிரதான மதகு மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் புதிய மதகு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கட்டுமான பணிகள்
அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்த மதகுகள் பொதுப்பணித்துறை சார்பில் இடிக்கப்பட்டு புதிய மதகுகள் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு எந்த கட்டுமான பணியும் நடைபெறாமல் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோன்று பாசனம் தரக்கூடிய புளியஞ்சி வாய்க்காலுக்கு உரிய பிரதான மதகும் இடிக்கப்பட்ட நிலையில் கிடக்கிறது. இன்னும் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க ஒரு மாத காலமே எஞ்சி இருக்கும் நிலையில், மதகுகள் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விரைந்து கட்ட வேண்டும்
எனவே ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களின் பாசனத்துக்கு உதவும் வாய்க்கால் மதகுகளை விரைந்து கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதகுகள் கட்டப்படவில்லை என்றால் ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் பெற முடியாது என விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.