பேளூரில் விவசாயிகள் சாலை மறியல்உதவி கலெக்டர் அமைதி பேச்சுவார்த்தை

Update: 2023-02-23 21:59 GMT

வாழப்பாடி, 

வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்காக நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அணை வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள், பேளூர்-அயோத்தியாப்பட்டணம் சாலையில் குறிச்சி மற்றும் ரங்கனூர் சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், ஆனைமடுவு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக வசிஷ்டநதியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பு, புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி தலைமையில் விவசாயிகள் அமைதிக்குழு பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தி, இந்த பிரச்சினைக்கு சமூக தீர்வு காண முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்