கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-04 21:03 GMT

தஞ்சாவூர்;

திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கடந்த 8 மாதங்களாக போராடி வரும் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்றுகாலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரும்புகளை கையில் ஏந்தி

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன், மாநில பொருளாளர் பெருமாள், மாநில செயலாளர் நாராயணசாமி, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர.விமலநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், ஜெயபால் ஆகியோர் பேசினர்.இதில் கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கைகளில் கரும்புகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான பாக்கி பணத்தை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் உள்ள கடனை ஆலை நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டு, விவசாயிகளை போலிக் கடன் பிரச்சினையில் இருந்து விடுவிக்க வேண்டும். சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். 8 மாதங்களாக போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். முதல்-அமைச்சர் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தை முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்