சின்னசேலம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டம்

சின்னசேலம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-18 13:50 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் தாலுகாவிற்குட்பட்ட மேல்நாரியப்பனூர் பெரியார் நகர் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேல்நாரியப்பனூரில் இருந்து பூசப்பாடி செல்லும் சாலையின் கிழக்கே விவசாயிகள் சென்று வருவதற்காக பட்டா நிலத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனி நபர் குடும்பத்தினர், அந்த பாதையில் பள்ளம் தோண்டி யாரும் செல்ல முடியாத அளவிற்கு தடை செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் வருவாய்த்துறையினர் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தனி நபர் குடும்பத்தினரை எச்சரித்தனர்.

விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில் மீண்டும் மேற்படி பாதையில் அந்த தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் தங்களது நிலத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்துக்கு செல்ல வழிவகை ஏற்படுத்தி தரக்கோரி கோஷம் எழுப்பினர். இருப்பினும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், இதுகுறித்து கலெக்டரிடம் சென்று முறையிட உள்ளோம் என்று கூறி விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்