நிலுவைத்தொகை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பந்தலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு நிலுவைத்தொகை வழங்க கோரி தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-13 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு நிலுவைத்தொகை வழங்க கோரி தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பந்தலூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்ட்கோ நகர், இரும்புபாலம், உப்பட்டி, சேலக்குன்னு, பொன்னானி, கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி, அய்யன்கொல்லி, தட்டாம்பாறை, கருத்தாடு, படச்சேரி, சேரங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலையில் வழங்கி வருகிறார்கள். இதற்கிடையே விவசாயிகளுக்கு தேயிலைக்கு வழங்கப்படும் தொகை மாதந்தோறும் முறையாக வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்தும், நிலுவை தொகையை மாதந்தோறும் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலுவைத்தொகை

இதற்கு சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பந்தலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கடந்த 3 மாதமாக நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. விவசாயிகளுக்கு முறையாக மாதந்தோறும் தேயிலைக்கான தொகையை வழங்க வேண்டும். பச்சை தேயிலை கிலோவுக்கு 18 ரூபாய் 61 பைசா என தேயிலை வாரியம் நிர்ணயம் செய்தது. ஆனால், தொழிற்சாலை மூலம் கிலோவுக்கு 16 ரூபாய் 50 பைசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறையை மாற்றி தேயிலை வாரியம் அறிவிக்கும் தொகையை, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வழங்க வேண்டும். மாதந்தோறும் வரவு, செலவு கணக்குகளை தொழிற்சாலை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் முத்துகுமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்