திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் பூக்களை கொட்டி போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் பூக்களை கொட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-27 19:06 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் பூக்களை கொட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூக்களுடன் வந்த விவசாயிகள்

திருச்சி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், பொதுச்செயலாளர் மேகராஜன், பூ விவசாயிகள் சங்க நிர்வாகி படையப்பா ரெங்கராஜ் மற்றும் திரளான விவசாயிகள் பூக்களுடன் வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு இருந்த செசன்சு கோர்ட்டு போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தி பூக்களை உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்று கூறினர். இதனால், விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பூக்களை கொட்டி போராட்டம்

அப்போது, ஸ்ரீரங்கத்தில் அரசால் கட்டப்பட்ட பூ மார்க்கெட் தற்போது வரை செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. சாத்தார வீதியில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் பூக்களுக்கு இடைத்தரகர்கள் குறைந்த விலையை நிர்ணயம் செய்கிறார்கள். பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் பூக்களை கூட்டரங்குக்கு கொண்டு சென்று அதிகாரிகளிடம் காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இறுதி வரை போலீசார் பூக்களை கலெக்டர் அலுவலகத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் அவர்கள் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு சென்று கலந்து கொண்டனர்.

உரிய விலை கிடைக்க நடவடிக்கை

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு, இடுபொருட்கள் விலை உயர்வு, இயற்கை சீற்றம் போன்ற நெருக்கடிகளை கடந்து பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இடைத்தரகர்களால் பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே பூக்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நறுமண தொழிற்சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்