தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி நாகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி நாகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி நாகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
மல்லிகை பூவிற்கு குறைந்த பட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.ஆயிரம் நிர்ணயம் செய்வதோடு பூக்காத காலங்களில் விவசாயிகளுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களுக்கும் மத்திய அரசு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தும்போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் வழங்குபவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். வேளாண் உரிமை மின்சாரத்தை மறைமுகமாக ரத்து செய்யும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளுக்கு 24 மணி நேரமம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை புத்தூர் ரவுண்டானா அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷம் எழுப்பினர்
போராட்டத்திற்கு சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வாங்கினார். மலர் வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கர், பொருளாளர் செந்தில்நாதன், சட்ட விழிப்புணர்வாளர் அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காத்திருப்பு போராட்டத்தை தொழில் அதிபர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போராட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நீடித்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
முடிவில் சங்க இளைஞரணி செயலாளர் தாயுமான தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.