கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-21 18:45 GMT


ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நுகர்வோர் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த விவசாயிகளின் ஒரு பிரிவினர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூன், ஜூலை மாதத்தில் திறந்து விடும் தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நீரின்றி கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மவுனம் காக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

பணியிட மாற்றம்

தமிழ்செல்வன்:- நாகை மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் கிராம வருவாய் உதவியாளர்கள் பணியாற்றுவதால், ஊழல் முறைகேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.

கமல்ராம்:- தலைஞாயிறு பகுதிகளில் தண்ணீர் இல்லால் கருகும் குறுவை சாகுபடி பயிர்களை உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும். தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

வாய்க்கால் தூர்வாராததால்...

மணியன்:- வேதாரண்யம் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீடுகள் 2, 3 ஆண்டுகளாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மஜீபுஷரீக்:- ராஜன் வாய்க்கால்- வேதாரண்யம் கால்வாய் இடையிலான கீழ்குமுளி, காரப்பிடாகை தெற்கு கிராம பகுதிகளுக்கு தண்ணீர் வரும் கீழ்குமுளி வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணீர் சரியாக வரவில்லை. வேட்டைக்காரனிருப்பு பகுதிகளில் வணிக வங்கி தொடங்க வேண்டும்.

கூடுதலாக 20சதவீத மானியத்தொகை

காளிமுத்து:- அரசு வழங்கும் குறுவை தொகுப்பு திட்டத்தில் இடுபொருட்கள் பெற வேளாண் விரிவாக்க மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் ரூ.60, ரூ.200 என்று வசூல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பிரபாகரன்:- வேளாண்மை பொறியியல் துறை மூலமாக எஸ்.எம்.ஏ.எம். திட்டத்தில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த தொகையை விவசாயிகளுக்கு விடுவிக்க வேண்டும். கீழ்வேளூர் தாலுகா ஆனைமங்கலம் பஞ்சாயத்து ஓர்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் லாரிகள் சென்று வர சிரமமாக உள்ளது.

அனைத்துதுறை அதிகாரிகளும்...

கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசும்போது:-

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அனைத்து துறை மாவட்ட அதிகாரிகளும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்