புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு; எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
திருவையாறு அருகே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வயலில் இறங்கியும் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவையாறு அருகே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வயலில் இறங்கியும் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
தஞ்சை அருகே உள்ளது திருவையாறு. இங்கு புகழ்பெற்ற கோவில்கள், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சமாதி போன்றவை உள்ளன. மேலும் திருவையாறில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோன்று கண்டியூர் போன்ற பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நெடுநேரம் நீண்ட வரிசையில் நிற்பதையும் காண முடியும். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது.
புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு
இதையடுத்து திருவையாறு, கண்டியூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அரசூர் காட்டுக்கோட்டை பாதை, நடுப்படுகை, பெரும்பலியூர், திருவையாறு, அந்தணக்குறிச்சி, விளாங்குடி சாலையை இணைக்கும் வகையில் 8 கி.மீ. தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கியும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து புறவழிச்சாலைக்கான நிலங்கள் அளவீடு செய்து அந்த பகுதிகளில் கல் ஊன்றப்பட்டன. அப்போது விவசாயிகள் நெல், தென்னை, வாழை, காய்கறி தோட்டங்கள் போன்ற பசுமையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் புறவழிச்சாலையை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொக்லின் எந்திரம் சிறைபிடிப்பு
மேலும் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர். கிராம சபை கூட்டத்திலும் மூன்று முறை புறவழிச்சாலை தேவையில்லை எனவும், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். இந்த நிலையில் புறவழிச்சாலைக்காக நேற்று பொக்லின் எந்திரங்களைக் கொண்டு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டது.
கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி சாலை காட்டுக்கோட்டை பாதையில் பணிக்காக கொண்டு வந்த பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
வயலில் கருப்பு கொடி
பின்னர் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தியவாறு வயலில் இறங்கியும் போராட்டத்தில்ஈடுபட்டனர். புறவழிச்சாலையால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.