பருத்தி சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்
முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பருத்தி சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி மற்றும் மிளகாய் விவசாயம் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி தாலுகாக்களில் பருத்தி விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகின்றது.
அதுபோல் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்னதாக ஆடி மாதமே பருத்தி விவசாயத்திற்காக விவசாயிகள் நிலங்களை டிராக்டர் மூலம் ஏர் உழுது தயார் செய்து வைத்து விடுவார்கள். பருவமழை சீசன் தொடங்குவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக ஏர் உழுத விவசாய நிலங்களில் பருத்தி விதைகளையும் தூவி விடுவார்கள்.பருவ மழை பெய்யத் தொடங்கியதும் பருத்தி செடிகளும் வளர தொடங்கிவிடும்.
நிலத்தை தயார் செய்யும் பணி
இந்த நிலையில் இந்த ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய தேரிருவேலி, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், சவேரியார்பட்டினம் பூசேரி, செங்கற்படை, கீழத்தூவல் மிக்கேல்பட்டினம் உள்ளிட்ட பல கிராமங்களில் சீசன் முடிந்த பருத்தி செடிகளை முழுமையாக வெட்டி அழித்து விவசாய நிலங்களை முழுமையாக சுத்தப்படுத்தி தற்போது அந்த இடங்களில் டிராக்டர் மூலம் ஏர் உழும் பணி தீவிரமாகவே நடைபெற்று வருகின்றது.
இது பற்றி முதுகுளத்தூரை சேர்ந்த விவசாயி முருகன் கூறும்போது:- கடந்த ஆண்டு தான் பருவமழை சீசனில் மழை பெய்யாததால் பருத்தி விவசாயமும் விலை இல்லாமல் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டாவது பருவமழை சீசனில் நல்ல மழை இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பில் தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் விவசாய நிலங்களில் பருத்தி விதைகள் தூவுவதற்காக விவசாய நிலத்தை ஏர் உழுது தயார் செய்து வருகின்றோம் என்றார்.