தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பவர்டில்லர், பவர்வீடர் வாங்க மானியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பவர்டில்லர், பவர்வீடர் வாங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-18 18:45 GMT

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேளாண் எந்திரங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திடவும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை எந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம் 2023-24-ம் நிதியாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு பவர் டில்லருக்கு அதிகபட்சம் ரூ.85 ஆயிரமும், ஒரு பவர்வீடர் (2 குதிரைத் திறனுக்கு மேல்) ரூ.35 ஆயிரமும், ஒரு பவர்வீடருக்கு (5 குதிரைத் திறனுக்கு மேல்) ரூ.63 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.

2021-22 முதல் 2023-24-ம் நிதியாண்டு வரை தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகளுக்கு168 பவர் டில்லர்கள் மற்றும் 6 பவர் வீடர்கள் எண்கள் ஆக மொத்தம் 174 எண்கள் ரூ.146.02 லட்சம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

விவரங்களுக்கு..

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் நிலப்பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் (9655708447) ; கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் கோவில்பட்டி உதவிசெயற் பொறியாளரையும் (9443276371), ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார விவசாயிகள் திருச்செந்தூர் உதவிசெயற் பொறியாளரையும் (8778426945) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்