ஏம்பேர் அருகே ரெயில் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்
ஏமப்பேர் புறவழிச்சாயைில் ரெயில் நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில் அமைக்க எதிர்ப்பு
சின்னசேலம்-கள்ளக்குறிச்சி வரை சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கவும், கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் ரெயில் நிலையம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு நிலம் அளவீடு செய்யப்பட்டு 2012-ம் ஆண்டு ரெயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி தற்போது ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே ரெயில் நிலையம் அமைக்கப்போவதாகவும், அளவீடு செய்யப்பட்ட நிலத்தில் இருந்து கூடுதலாக 100 அடி நிலம் அளவீடு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அருகே சேலம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். பின்னர், ஏமப்பேர் புறவழிச்சாலை அருகில் உள்ள விவசாய நிலத்தில் ரெயில் நிலையம் அமைக்க கூடாது எனவும், ஏற்கனவே அரசாணை அறிவித்து அளவீடு செய்த துருகம் சாலை பகுதியில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேச்சு வார்த்தை
இதுப்பற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்திநாராயணன், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.