நிலங்களை மீட்டு தர விவசாயிகள் சப்-கலெக்டரிடம் மனு
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த நிலங்களை மீட்டு தர விவசாயிகள் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே இளித்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குன்னூர் சப்-கலெக்டரிடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- இளித்தொரை கிராமத்தில் வசிக்கும் எங்களுக்கு கோத்தகிரி தாலூகா நடுஹட்டி கிராமத்தில் நிலங்கள் உள்ளன. ஒருவர் எங்களது நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக கூறி அணுகினார். தோட்டத்தை விற்று விட்டால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விற்க மறுத்து விட்டோம். அதற்கு அவர் சில விவசாயிகள் தோட்டங்களை விற்க தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வாங்கி தோட்டங்களை சுற்றிவேலி அமைத்தால், தோட்டத்திற்கு செல்ல முடியாது என அச்சுறுத்தி சிலரது தோட்டத்தை வாங்கி உள்ளனர். இதில் எங்களது தோட்டங்களும் வேறொருவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரித்த போது, எங்களது தோட்டம் விற்பனை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். எனவே, மனுவில் கொடுக்கப்பட்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்திருந்தால், அதனை ரத்து செய்து மீட்டு தர வேண்டும். மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.