கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-08-07 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

கம்பு பயிர் சாகுபடி

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பொருவளூர், பொரசப்பட்டு, ஆற்கவாடி, அரும்பராம்பட்டு, சுத்தமலை, ஈருடையான்பட்டு, மேல்சிறுவள்ளுர், மைக்கேல்புரம், புதுப்பட்டு, புத்திராம்பட்டு, பவுஞ்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து, கம்பு உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு உள்ளிட்ட பயறு வகை பயிர்களை பெரும்பாலும் இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்வதில்லை. தற்போது கம்பு பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

100 ஏக்கர் பரப்பளவில்

பெரும்பாலும் இப்பகுதிகளில் ஆண்டு பயிர்களான கரும்பு, 3 மாத பயிர்களான நெல், மணிலா மற்றும் உளுந்து உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து பராமரித்து வருகிறோம். மேலும் கம்பு பயிரையும் சாகுபடி செய்து வருகிறோம். சுமார் 100 ஏக்கா் பரப்பளவில் இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பயிரை பராமரிப்பது சற்று சிரமமாக உள்ளது. சாகுபடிக்கு வேலையாட்கள் அதிக அளவில் தேவை, வேலைப் பளுவும் அதிகம். பயிரை பறவைகள் தின்று விடுகின்றன. இதனால் காலை முதல் இரவு வரை பறவைகளை துரத்துவது என்பது தான் சற்று சிரமமாக உள்ளது. இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பயிர் சாகுபடி செய்து வருகிறோம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இப்பகுதிகளில் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

இது ஒரு புறம் இருந்தாலும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பயறு வகை பயிர்களை பயிரிடுவதற்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் மானிய விலையில் விதைகள் தருவது கிடையாது. எனவே பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி மானிய விலையில் பயறு வகை பயிர்களை விதைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்