மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Update: 2023-05-28 10:17 GMT

போடிப்பட்டி,

மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாற்றுப் பயிர்

மடத்துக்குளத்தில் செயல்பட்டு வரும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, விவசாயிகளிடையே கரும்பு சாகுபடியில் ஆர்வத்தை தூண்டியது.இதனால் இந்த பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.ஆனால் காலப்போக்கில் போதிய விலையின்மை, சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடி, தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியது.இதனால் மக்காச்சோளம், காய்கறிகள் என பல மாற்றுப் பயிர்களை நோக்கி விவசாயிகளின் கவனம் திரும்பி வருகிறது.இந்தநிலையில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.1 ஏக்கரில் கரும்பு பயிரிடுவதற்கு ஆகும் தண்ணீரைப் பயன்படுத்தி 4 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு விளைய வைக்க முடியும் என்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.மேலும் இதனை இறவைப் பாசனத்தில் மட்டுமல்லாமல் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் மானாவாரியிலும் சாகுபடி செய்ய முடியும்.

இடைத்தரகர்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'கேரளாவில் அதிக பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.ஆனால் தமிழகத்தில் தான் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி அதிகமாக உள்ளது.இதற்கு நமது பகுதியின் பருவநிலை, மண்வளம் மற்றும் ரகம் தேர்வு போன்றவை காரணமாக உள்ளது.இதில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய, தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்ட பல புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.250 முதல் 300 நாட்கள் வயதுடைய ரகங்கள் உள்ளது.ஜவ்வரிசி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக உள்ளதால் ஆண்டு முழுவதும் மரவள்ளிக் கிழங்குக்கான தேவை உள்ளது.ஆனால் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விலை உள்ளது.ஜவ்வரிசி ஆலைகளுடன் விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு விற்பனை செய்யும் வாய்ப்பு இல்லை.இதனால் விவசாயிகளை விட இடைத் தரகர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.எனவே வேளாண் வணிகத்துறை மூலம் விற்பனை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த முடியும்.வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செஞ்சிலந்திப்பேன் போன்ற பூச்சிகளின் தாக்குதலிலிருந்தும், இலைப்புள்ளி, கிழங்கு அழுகல் போன்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்க பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்