தூத்துக்குடி மாவட்டத்தில் உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், மாவட்ட தலைவர் ஆர்.ராகவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாய பணி
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் ராபி பருவத்தில் விதைப்பு செய்து தற்போது பெய்து வரும் மழையின் காரணாமாக பயிர்களுக்கு உரமிடும் பணியை தொடங்கி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக தவறி பெய்த பருவ மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் இந்த ஆண்டும் விவசாயிகள் பருவ மழையை எதிர்நோக்கி விவசாய பணிகளை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்களுக்கு யூரியா உரமிடும் பணியை விவசாயிகள் தீவிரபடுத்தி உள்ளனர்.
உரம் தட்டுப்பாடு
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தேவையான உரங்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரங்கள் இருப்பு இல்லாத நிலைமை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தேவைக்கு ஏற்ற அளவில் யூரியா வழங்கிட மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி உரம் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.