கால்நடை ஆஸ்பத்திரி செயல்படும் நேரத்தை மாற்றக்கூடாது
கால்நடை ஆஸ்பத்திரி செயல்படும் நேரத்தை மாற்றக்கூடாது
போடிப்பட்டி
கால்நடை ஆஸ்பத்திரி நேரத்தை மாற்றம் செய்யக்கூடாது என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன், உடுமலை தாசில்தார் கண்ணாமணி, மடத்துக்குளம் தாசில்தார் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
மவுனகுருசாமி:பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வழிப் பாதையை அளவீடு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது. அதற்கென தனி அளவையர் நியமிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மூலம் அளவீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். பூளவாடி ஊராட்சியில் 10 கிலோ மீட்டருக்கு மேல் மண் சாலைகளாக உள்ளது.அவற்றை தார்சாலைகளாக மாற்ற வேண்டும்.
பரமசிவம்: கால்நடை மருத்துவமனைகளை நேரம் மாற்றம் செய்வது குறித்து கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் கூலித்தொழிலாளர்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவே 2 மணிக்கு மேல் ஆகும் நிலையில் 2 மணிக்கு மேல் மருத்துவமனை செயல்படாது என்பது பயனற்றதாகி விடும். மேலும் நாய்கள் தொல்லை அதிகரித்து விட்ட நிலையில் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் வெறி நாய்க்கடி தடுப்பூசி போட வேண்டும்.
தண்ணீர் திருட்டு
எலையமுத்தூர் பகுதியில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததுடன் தண்ணீர் திருட்டிலும் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் போராடும் நிலை ஏற்படும். ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை ஆவணங்களின் அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரணி வாய்க்கால் பாசனத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் மேற்கொள்ளும்போது குடிநீர்க்குழாய் உடைப்பு ஏற்படுகிறது. ஆனால் அதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படாததால் சீரமைப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.எனவே பணிகளின் போது 2 துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
கோபால்:ஜல்லிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள சுமார் 5½ ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பல அரசுத்துறைகள் அலுவலகம் அமைக்கக் கூட இடமில்லாமல் தவித்து வரும் நிலையில் பிரதான சாலையில் உள்ள இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்.தற்போது தண்ணீர் இல்லாத குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் கிராவல் மண் எடுக்க பர்மிட்டுக்கு ரூ. 1300 வசூலிக்கப்படுகிறது.ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 2300 வசூலிக்கப்படுகிறது.இதனால் வீடு கட்டும் ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்படைவதுடன் கட்டுமானத் தொழில் பாதிக்கும் அபாயம் உள்ளது.
குடிநீர் இணைப்பு
சிங்காரம்;அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்பட்டும் வெளிச்சந்தையில் கொப்பரை விலை உயரவில்லை.இதற்கு வெறும் 216 கிலோ கொப்பரையை மட்டும் வாங்கி விட்டு வெளி சந்தையில் 1 டன் அளவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையே காரணமாகும்.எனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரையை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.அரசு சிமெண்டு சரியான அளவில் கிடைக்காததால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் ஜல்ஜீவன் திட்டத்தில் வல்லகுண்டாபுரம் கிராமத்துக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
நித்தியானந்தம்: விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை.சிறுகுறு விவசாயிகள் அனைவரும் தென்னை பயிரிடுவதில்லை.எனவே 100 நாள் வேலைத்திட்டப்பணியாளர்கள் மூலம் அனைத்துவிதமான விவசாயப்பணிகளும் மேற்கொள்ள வேண்டும்.மேலும் மண் எடுத்துச்செல்லும் லாரிகள் மூடாமல் கொண்டு செல்வதால் தூசி பறந்து விபத்துக்களுக்கு காரணமாகிறது.
பாலதண்டபாணி:வாய்க்கால்களை தூர் வாருவதற்கு பொதுப்பணித்துறையிடம் போதுமான நிதி இல்லாத நிலையில் 100 நாள் வேலைத்திட்டப்பணியாளர்கள் மூலம் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதியோர் உதவி தொகை
சவுந்திரராஜ்:சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை பலருக்கும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.பல பணக்காரர்கள் இந்த தொகையை பெற்று வரும் நிலையில் இதை நம்பியே வாழ்க்கையை ஓட்டி வரும் ஏழைகளுக்கு கிடைக்கவில்லை.எந்திரங்களை நம்பாமல் கிராமநிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் நேரடி கள ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணக்கம்பாளையம் பகுதியில் பணம் படைத்தவர்களுக்கு சென்றுள்ளது.அதனை ரத்து செய்ய வேண்டும்.
நீரா பெரியசாமி:உப்பாறு ஓடையில் குடிமங்கலம் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.இதில் ஏற்கனவே உள்ள தடுப்பணைகளுக்கு அருகில் தேவையில்லாமல் தடுப்பணை கட்டுவதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
வள்ளிநாயகம்: ஆண்டியக்கவுண்டனூர் மலை அடிவாரத்தில் முறையான அனுமதியில்லாமல் கிராவல் மண் எடுக்கப்படுகிறது.வனப்பகுதியிலிருந்து 12 கி.மீ. க்குள் மண் எடுத்தால் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை.இதனைத் தடுக்க வேண்டும்.பல இடங்களில் பிஏபி கால்வாய்களுக்கு அருகில் கிணறு தோண்டப்படுகிறது.அதனை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
---
3 காலம்
உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.