டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மனு
டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மனு அளித்தனர்.
டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில துணை தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் அரை நிர்வாணமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த அந்த மனுவில், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய ரூ.10 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் 95 கோடி விவசாயிகள் வாங்கிய ரூ.1 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இந்த அநீதிகளை எல்லாம் கண்டித்து அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் புதுடெல்லி ஜந்தர்மந்தரில் அமைதியான முறையில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வியாபார தலம்
மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ராஜா கொடுத்த மனுவில், எங்கள் கட்சியின் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பஸ் நிலையம், கல்லூரி சாலை, என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் ஆர்ச், பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு காமராஜர் வளைவு போன்ற பகுதிகளில் பல்வேறு வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த பகுதிகளை வியாபார தலமாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொது பாதை
ஸ்ரீரங்கம் பனையபுரம் கிராம பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், 35 ஆண்டுகளாக பொது பாதை பயன்படுத்தி வருகிறோம். பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அந்த பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிலர் அந்த பொதுப் பாதையை அடைத்துள்ளனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குறைந்த மின்னழுத்தம்
திருச்சி நாகமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தீபிகா நகர், கணேஷ் நகர், ஜெயலட்சுமி நகர், ஜெய் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி மாநகர, மாவட்ட பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத்தலைவர் பாலு தலைமையில் கொடுத்த மனுவில், திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் படி வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்று வருகின்றது. அப்போது அங்கு வந்த திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பெண் பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அவமதிப்பு செய்துவிட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆக்கி போட்டி
எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த அபிராமி கொடுத்த மனுவில், நான் ரோலர் ஆக்கி போட்டியில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். மேலும் தந்தையை இழந்த எனக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள அடிப்படை செலவீனங்கள் செய்வதற்கு போதுமான வசதி இல்லை. எனவே எனக்கு நிதி உதவி செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
போர் நினைவு சின்னம்
திருச்சி கீழப்புலிவார்டுரோட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான முகமதுஇப்ராகிம் அளித்த மனுவில், கடந்த 1914-ம் ஆண்டு முதலாம் உலகப்போரில் திருச்சி மாவட்டம் சார்பில் 302 பேர் பங்கேற்று, அதில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஆங்கிலேயர்களால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. அங்கு வருடந்தோறும் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் அந்த இடம் அணிவகுப்பு நடத்தவும், மரியாதை செலுத்தவும் சிரமமாக உள்ளது. ஆகவே 1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போர் மற்றும் கார்கில்போரில் உயிர் நீத்த தியாகிகள் சார்பில் திருச்சியில் புதியதாக போர் நினைவுச்சின்னத்தை உருவாக்கி தர வேண்டும். இதற்கு கீழப்புலிவார்டுரோட்டில் உள்ள முருகன் திரையரங்கம் இருந்த ஒரு ஏக்கர் பரப்பளவு இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.