விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இதில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளை பற்றியும், அதற்கு தீர்வு காண்பதுகுறித்தும் பேசினர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
ஆக்கிரமிப்பு
ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு செல்லும் நீர்நிலை வழித்தடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடமலையில் சுவேத நதியில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பூரில் பனங்காட்டு ஏரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆனால் இந்த ஏரிக்கு வரும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் கொட்டவாடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பொக்லைன் எந்திரம் விவசாய பயன்பாட்டிற்கு வாடகைக்கு கொடுப்பது இல்லை. எனவே, விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்துவிட்டு வேறு நபர்களுக்கு பொக்லைன் எந்திரம் வழங்க வேண்டும். வேளாண்மை உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்களில் துறை சார்ந்த திட்டங்கள், மானியம் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கலெக்டர் உத்தரவு
இதற்கு பதில் அளித்து கலெக்டர் கார்மேகம் பேசும்போது, ஏரி, குளங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், அரசு அலுவலக சுவர்களில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்க வேண்டும். அதற்கு மாறாக அரசு அலுவலக சுவரில் சினிமா போஸ்டர்கள், விளம்பரங்கள் இருந்தால் அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் சார்பில் காய்கறி மற்றும் விதை கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.