விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பருத்தி விலை சரிவால் மக்காச்சோள சாகுபடிக்கு மாறுவதாகவும், பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-06-27 19:37 GMT

பருத்தி விலை சரிவால் மக்காச்சோள சாகுபடிக்கு மாறுவதாகவும், பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், துணை இயக்குனர் மல்லிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் விமலா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும் போது, கூறியதாவது:-

மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, துறையூர் தாலுகாக்களில் ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், ஓடைகளை தூர்வார வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். மின்சார கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பருத்தி விலை சரிவு

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. தினமும் 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிவிடும்.

எனவே காவிரி மேலாண்மை வாரியம் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் பணம் செலுத்தி இணைப்பு கிடைக்காமல் 200 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தி விலை கடும் சரிவால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடிக்கு மாறுகிறார்கள். விலை சரிவுக்கான காரணத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. ஆனால் விவசாயிகளிடம் ரூ.10-க்கும், ரூ.15-க்கும் தான் கொள்முதல் செய்கிறார்கள். இடைத்தரகர்கள் தான் சம்பாதிக்கிறார்கள். எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.37 ஆயிரத்து 500 பயிர்கடன்

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். மேலும்பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களாக கொடுத்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜெயராமன் கூறும்போது, ஏக்கருக்கு ரூ.37 ஆயிரத்து 500 பயிர்கடன் வழங்க இருப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்