மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
கடலூர் மாவட்டம் முழுதும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கலக்டரிடம் புகார் தெரிவித்து பேசினர்.
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-
ஷட்டர்
ரெங்கநாயகி (விவசாயி) :- வீராணம் ஏரி ராதா வாய்க்காலில் ஷட்டர் அமைக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் அனைத்தும் வீணாக செல்லும் நிலை ஏற்படும். உளுந்து பயிருக்கு இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை அலுவலர்:- வீராணம் ஏரி பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. அதேபோல் ராதா வாய்க்காலிலும் ஷட்டர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்வராஜ் (விவசாயி):- விவசாயிகளுக்கு தேவையான வண்டல் மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்:- நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் (விவசாயி) :- குறுவை சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. ஆகவே தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூரியா தட்டுப்பாடு
செந்தில்முருகன் (விவசாயி) :- விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் உரக்கடைகளில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. சில உரக்கடைகளில் யூரியா உரம் இருந்தும், அதை சிறு விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது பெரும்பாலான விவசாயிகள் எழுந்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதை கேட்ட கலெக்டர், டெல்டா பகுதியில் 528 மெட்ரிக்டன் யூரியா இருப்பு உள்ளது. மற்ற இடங்களில் குறைவாக உள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியிலும் கூடுதலாக யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கூட்டுறவுத்துறை அலுவலர்:- தூத்துக்குடியில் இருந்து யூரியா உரம் விருத்தாசலத்திற்கு வர இருக்கிறது. உரம் வந்ததும், அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
தண்ணீரை சேமிக்க வேண்டும்
செந்தமிழ்ச்செல்வன் (விவசாயி) :- பச்சையாங்குப்பம் பகுதியில் 90 ஏக்கர் விவசாய நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த மண்ணை ஆய்வு செய்து. விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
ரவீந்திரன் (விவசாயி) :- கடலூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கிறது. ஆனால் பாதுகாக்க போதிய வசதி இல்லை. அதற்கு தேவையான இட வசதி அமைத்து தர வேண்டும். மாற்றுப்பயிர் திட்டத்தை விவசாயிகளிடம் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் வீணாகும் 5.8 டி.எம்.சி.தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன் (விவசாயி):- கரும்பு பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை அதிகாரி:- இது பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். அதற்கு தேவையான மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
மின் இணைப்பு
முருகானந்தம் (விவசாயி):- 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் காவாலக்குடி பகுதியில் 32 பேர் பதிவு செய்தனர். அவர்களுக்கு அந்த திட்டத்தில் இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மின்துறை அதிகாரி:- 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மேலும் 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.
அதைத்தொடர்ந்து தரிசு நிலத்தை மேம்படுத்தி சிறப்பாக விவசாயம் செய்த 3 விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.