கோத்தகிரி
தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 7-வது நாளான நேற்று உண்ணாவிரத போராட்டத்தை மேல் பிக்கட்டி ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், கீழ் பிக்கட்டி ஊர் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் கடைகம்பட்டி, ஜக்கலோடை, கெச்சிகட்டி, கப்பட்டி, சேலக்கொரை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நட்டக்கல் பகுதிக்கு சென்ற குன்னூர் துணை சூப்பிரண்டு குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து 7 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு போராட்ட குழுவினர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பதில் தெரிவிப்பதாக கூறினர்.