அறுவடை செய்த நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள்

திருஉத்தரகோசமங்கையில் அறுவடை செய்த நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2023-02-18 18:45 GMT

திருஉத்தரகோசமங்கை,

திருஉத்தரகோசமங்கையில் அறுவடை செய்த நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போய் விட்டதால் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் நெல்சாகுபடி தண்ணீர் இல்லாமல் கருகிப் போய் விட்டது.

இதனிடையே ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் வைகை தண்ணீர் வரத்தால் நெல் விவசாயம் காப்பாற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல் உலர வைக்கும் பணி

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்த வைகை தண்ணீர் உத்தரகோசமங்கை கண்மாய்க்கும் கொண்டுவரப்பட்ட நிலையில் திருஉத்தரகோசமங்கை கண்மாய் முழுமையாக நிரம்பி காட்சியளித்து. மழை பெய்யாத நிலையிலும் உத்தரகோசமங்கை கண்மாய்க்கு கொண்டுவரப்பட்ட வைகை தண்ணீர் நெற்பயிர்களுக்கு பாய்ச்சப்பட்டதால் நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்தன. இதனால் உத்தரகோசமங்கை பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அது போல் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை சாலையில் பல இடங்களிலும் உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த நெல்களை நல்ல விலைக்கு கொடுப்பதற்காக எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர்.

இதுகுறித்து திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள பெண் விவசாயி உடையாள் கூறியதாவது:-

விலை அதிகரிப்பு

கடந்த ஆண்டு பருவமழை சீசனில் மழை சரிவர பெய்யவில்லை. இருப்பினும் உத்தரகோசமங்கை கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால் நெற்பயிர் நன்கு விளைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல்லுக்கு நல்ல விலை கிடைத்துள்ளன. சோதி மட்டை 65 கிலோ மூடை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை கூடுதலாகவே போகின்றது. ஒரு மூடை ரூ.1800 வரை விலை போகின்றது. அது போல் சம்பா ஒரு மூடை தற்போது ரூ.1200-க்கு விலை போகின்றது.

ஆனால் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்களை விவசாயிகள் யாரும் இதுவரை வியாபாரிகளிடம் கொடுக்கவில்லை. இன்னும் விலை உயரவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் சம்பா நெல்களை இன்னும் கொடுக்கவில்லை.நல்ல விலை கிடைத்த பின்னர் சம்பா நெல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் வைகை தண்ணீர் வரத்தால் நெற் பயிர் விவசாயம் காப்பாற்றப்பட்ட நிலையிலும் அருகே உள்ள புதுக்குளம், பாட்டபத்து, நல்லாங்குடி மேலசீத்தை உள்ளிட்ட பல கிராமங்களிலும் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்