விவசாயிகள் தர்ணா போராட்டம்

குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்

Update: 2022-07-29 16:32 GMT
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு கோவில்களில் ஆய்வுப்பணி மேற்கொண்டதால் அதில் பங்கேற்ற கலெக்டர் லலிதா இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.


தர்ணா போராட்டம்

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையிலான விவசாயிகள், குறுவை பயிர் காப்பீட்டு திட்டத்தை அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்காததை கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்.

கடலில் கலக்கும் தண்ணீர்

இதனைத்தொடர்ந்து, மற்ற விவசாயிகளுடன் கூட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் பேசியதாவது:-

முருகன் (கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர்): சிட்டா, அடங்கல் விரைவாக வழங்கினால் கடன் எளிதில் பெற வசதியாக இருக்கும்.

மாவை கணேசன்: காவிரியில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. இந்த நீர் கடலில் கலப்பதை தவிர்த்து, விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

வரதராஜன் (கொள்ளிடம்): எங்கள் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை.

உரத்தட்டுப்பாடு இருக்காது

குருகோபிகணேசன் (காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம்): மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, 2 ஆண்டுகளாகியும் மின்மாற்றி பழுதுநீக்க நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இம்மாவட்டத்துக்கு தனியாக மின்மாற்றி பழுது நீக்கும் பணிமனையை அமைக்க வேண்டும்.

இதேபோல, விவசாயிகள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

சேகர்(வேளாண்துறை இணை இயக்குனர்): குறுவைக்கு தேவையான உரங்கள் வந்துள்ளது. இதனால் உரத்தட்டுப்பாடு இருக்காது என்றார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்