விவசாயிகளின் விவரங்கள் 'கிரெயின்ஸ்' வலைதளத்தில் பதிவு
வேளாண் நலத்திட்டங்களை பெற்று விவசாயிகள் பயனடைய அவர்களது முழு விவரங்கள் ‘கிரெயின்ஸ்’ என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை,
வேளாண் நலத்திட்டங்களை பெற்று விவசாயிகள் பயனடைய அவர்களது முழு விவரங்கள் 'கிரெயின்ஸ்' என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் அடுக்ககம்
விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் அடுக்ககம் திட்டமானது வருகிற 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு 'கிரெயின்ஸ்' என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயனடையும் வகையில் இந்த இணையதளத்தில் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, கூட்டுறவுத் துறை, பட்டுவளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைக்கப்பட உள்ளன.
மேலும், இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
நேரடி பண பரிமாற்றம்
விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் நேரடி பண பரிமாற்றம் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். விவசாயிகளின் நிலஉடமை விவரங்களை பதிவு செய்யும் பணி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.