மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்0நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ராஜபாளையம் அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்னர். மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-19 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்னர். மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்காச்சோளம்

ராஜபாளையம் அருகேயுள்ள நரிக்குளம் கிராமத்தை சுற்றி 500-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. 150-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். வானம் பார்த்த பூமி என்பதால் குறைந்த அளவிலான தண்ணீர் தேவை மற்றும் பராமரிப்பு உள்ள மக்காச்சோளம் இங்கு பிரதான பயிராக உள்ளது.

3 மாத பயிரான மக்காச்சோள பயிர்களை கடந்த செப்டம்பர் மாதம் நட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து பராமரித்து வந்தனர். தொடக்கத்தில் மயில் உள்பட பறவைகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. அடுத்ததாக முயல் தொல்லை இருந்துள்ளது. தற்போது பயிர்களை 80 நாட்கள் வரை வளர்த்துள்ளனர்.

மன வேதனை

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து, வயலுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவழித்து வளர்த்த கதிர்கள் ஒரே இரவில் சேதமானது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளதாக அப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது வரை சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதால், ரூ.5 லட்சம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வேலி அமைக்க அனுமதி இல்லை என்பதால் கயிறு கட்டி பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கயிறுகளை அறுத்துக் கொண்டு காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து சேதப்படுத்துகின்றன.

நிவாரணம்

எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இருந்து அவற்றை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ள நரிக்குளம் பகுதி விவசாயிகள், சேதமான பயிர்களுக்கு அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்