பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ள அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ள அனுமதி அளிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ள அனுமதி அளிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
குறை தீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது, குடியாத்தம் அருகே உள்ள செட்டிகுப்பம் ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் நிரந்தரமாக கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயி ஒருவர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு அதிகாரிகள் கூறுகையில், மோர்தானா அணை 8,500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு ஏரிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த ஏரி மோர்தானா அணையில் பாசன பரப்பளவுக்கு கீழ் வரவேண்டும். இதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். அதன்பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றனர்.
இயற்கை விவசாயம்
தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு ஒதுக்க வேண்டும். ஊராட்சி பகுதியில் மட்டுமின்றி டவுன் பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒடுகத்தூரில் ஒரு தேசிய வங்கி மட்டுமே உள்ளது. இதில் எப்போதும் கூட்டமாக உள்ளது. எனவே ஒடுகத்தூரில் கூடுதலாக தேசிய வங்கி ஒன்று ஏற்படுத்த நடடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து முறையான பயிற்சி இருந்தால் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும்.
ஒடுகத்தூர் பகுதியில் மேல்அரசம்பட்டு, தீர்த்தம், கொட்டாவூர் பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ் சரியாக இயக்கப்படுவதில்லை.
உதவித்தொகை
தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் ரூ.6 ஆயிரம் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் ஆம்பூர் சர்க்கரை ஆலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினசரி மற்றும் வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்.
வனவிலங்குகளை வனத்துறையினரே கட்டுப்படுத்த வேண்டும். பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுத் தள்ள விவசாயிகளுக்கு அனுமதி தர வேண்டும். யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கலெக்டர் கூறினார். மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் போதுமான அளவு யூரியா உள்ளிட்ட உரங்களை இருப்பு வைக்க வேண்டும் என்றும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
=====
---