மண் அரிப்பு காரணமாக வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் உடைப்பு-விரைவில் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மண் அரிப்பு ஏற்பட்டதால் வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. எனவே விரைவில் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
மண் அரிப்பு ஏற்பட்டதால் வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. எனவே விரைவில் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கால்வாயில் உடைப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பொள்ளாச்சி, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், ஆழியாறு பீடர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மூலம் மொத்தம் 11,181 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அ, ஆ என இரு மண்டலங்களாக பிரித்து பாசனம் செய்யப்படுகிறது.
இதில் ஆ மண்டல பாசனத்தில் 5623 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த மண்டலத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி பாசனத்திற்கு அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 3 சுற்றுக்கள் முடிந்து 4 சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வேட்டைக்காரன்புதூர் அருகே கால்வாயில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் வீணாகி அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.
பலமுறை வலியுறுத்தியும் பயன் இல்லை
மண் அரிப்பு காரணமாக கால்வாயோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதை பார்த்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. பின்னர் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் நாட்ராயன் மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் தண்ணீர் திறக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை பெறப்பட்டு, டிசம்பர் மாதம் 23-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஒரு சுற்றுக்கு 15 நாட்கள் வீதம் 5 சுற்றுக்கள் தண்ணீர் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. 3-வது சுற்று முடிந்து கடந்த 3-ந்தேதி 4-வது சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வருகிற 17-ந்தேதி 4-வது சுற்று தண்ணீர் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் தற்போது கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கால்வாய் மோசமாக உள்ளதாக பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்ற ஏற்கனவே 2 முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி உள்ளது. தற்போது சுமார் 8 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாகி உள்ளது. எனவே அதிகாரிகள் ஆழியாறு முதல் திவான்சாபுதூர் வரை உள்ள வேட்டைக்காரன்புதூர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கால்வாயை சீரமைக்க ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு-
பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
வேட்டைக்காரன்புதூர் கால்வாய் 18 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தற்போது 7.45-வது கிலோ மீட்டர் தூரத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி சென்ற தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. தண்ணீர் வடிந்ததும் கால்வாய் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக சீரமைக்கப்படும். மேலும் நீர்வள, நில வளத்துறை திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் பழைய ஆயக்கட்டில் உள்ள 5 அணைக்கட்டுக்கள், குளப்பத்துக்குளத்திற்கு செல்லும் கால்வாய், குளத்தின் மதகுகள் மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் சீரமைக்கப்படும். இதற்காக பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.