விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பினால் சுருங்கி வரும் ஏரி வாய்க்கால் விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பினால் சுருங்கி வரும் ஏரி வாய்க்காலை விரைந்து சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-26 18:45 GMT

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரத்தில் ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து பானாம்பட்டு, மரகதபுரம், ஆழாங்கால் ஆகிய பகுதிகளுக்கான ஏரி வாய்க்கால்கள் செல்கின்றன. இதில் பானாம்பட்டு ஏரி வாய்க்காலானது, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து மரகதபுரம், பிடாகம், ஜானகிபுரம், விழுப்புரம் தந்தை பெரியார் நகர், மருதூர் பகுதிகளை கடந்து பானாம்பட்டு ஏரியை சென்றடைகிறது.

இந்த நீர்வரத்து வாய்க்கால்கள் மூலம் வரக்கூடிய தண்ணீரால் பானாம்பட்டு பெரிய ஏரி நிரம்பும். அதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதோடு அப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர்ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வாய்க்கால், ஜானகிபுரத்தில் இருந்து பிரிந்து சாலாமேடு, மருதூர், கொளத்தூர் ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல பயன்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பின் பிடியில்

இந்நிலையில் பானாம்பட்டு பெரிய ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய பிரதான வாய்க்காலாக இருக்கும் இந்த வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் பகுதியில், பானாம்பட்டு ஏரிக்கு நீர்வரத்து செல்லக்கூடிய வாய்க்காலில் தண்ணீர் வரத்து இன்றி அடைபட்டுள்ளது.

இதுபற்றி விவசாயிகள் பலமுறை முறையிட்டதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர், அந்த வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து அடைப்பையும் சரிசெய்தனர். இதனால் சில மாதங்கள் மட்டும் அந்த வாய்க்கால் மூலம் பானாம்பட்டு ஏரிக்கு நீர்வரத்து இருந்தது. அதன் பிறகு மீண்டும் அந்த வாய்க்காலை அவ்வப்போது தூர்வாரி பராமரிப்பு செய்யாமல் அப்படியே பொதுப்பணித்துறையினர் விட்டுவிட்டனர்.

நீர்வரத்து தடை

இதன் விளைவு மீண்டும் அந்த நீர்வரத்து வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் அடைபட்டுள்ளது. காரணம், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் மற்றும் நகரில் உள்ள பல கடைகளில் சேரும் குப்பைகளையும் இங்குள்ள வாய்க்காலில் கொண்டுவந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். அந்த வாய்க்கால் தண்ணீரில் பிளாஸ்டிக் குப்பைகளும் குவிந்து கிடப்பதால் ஏரிக்கு தண்ணீர் செல்ல வழியின்றி அடைபட்டுள்ளது.

மேலும் அந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே வருகிறது. வாய்க்கால் மீது சிலர் கடைகளை வைத்து வருகின்றனர். கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருப்பதால் மழைக்காலங்களில் பானாம்பட்டு ஏரிக்கு, இந்த வாய்க்கால் மூலம் நீர்வரத்து செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் ஏரி பாசனத்தையே நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

விரைந்து சீரமைக்க கோரிக்கை

இந்த வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கக்கோரி பலமுறை பொதுப்பணித்துறையினரிடம் விவசாயிகள், வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தண்ணீர் செல்ல வழியின்றி இருப்பதால் பானாம்பட்டு ஏரிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதோடு மட்டுமின்றி சாலாமேடு, மருதூர், கொளத்தூர் ஏரிகளுக்கும் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், இனியும் காலம் தாழ்த்தாமல் பானாம்பட்டு ஏரிக்கு நீர்வரத்து செல்லக்கூடிய வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்