நங்காஞ்சி ஆறு பகுதியில் நில எடுப்புக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நங்காஞ்சி ஆறு பகுதியில் நில எடுப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-24 18:43 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், புகழூர் பகுதியில் விவசாயிகள் எளிதாக சென்று வரும் வகையில் ெரயில்வே பாதையினை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும்,

நங்காஞ்சி ஆறு பகுதியில் நிலம் எடுத்ததை தொடர்ந்து உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும், கூட்டு பட்டாவை தனிப்பட்டவாக மாற்றி தர வேண்டும், பணிக்கம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு பாலம் அமைத்து, நீர் வழி வாய்க்கால் அடைப்பு இருப்பதை தூர்வாரி கொடுக்க வேண்டும்,

போக்குவரத்திற்கு சிரமம்

குளித்தலை பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல் கொள்முதல் செய்யும் குத்தகைதாரர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் வழங்க வேண்டும், தண்ணீர் பள்ளி முதல் சிவாயம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் மரங்களின் கிளைகள் சாய்வாக உள்ளதால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்ய வேண்டும், பொதுப்பணி துறை மூலம் பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு வழங்க வேண்டும், அத்திப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதை தடுத்து பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் பேசினர்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் 11 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 10 ஆயிரத்து 70 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் சைபுதீன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்