மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்குமா? -விவசாயிகள்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-02-06 19:44 GMT

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நெல் சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சாகுபடி பணிகள் நடந்தன.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு (2022) குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.

மகசூல் இழப்பு

குறுவை அறுவடை நேரத்தில் மழை காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பா சாகுபடியில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்டனர்.

ஆனால் சம்பா அறுவடை நேரத்திலும் மழை கொட்டி தீர்த்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்்த 1-ந் ேததி முதல் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்ததால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

பாபநாசம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சுற்றுப்பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்த நிலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாபநாசம் பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள். நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் மகசூல் பாதியாக குறைந்துவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு போதாது. இதைவிட கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவரும், காவலூர் ஊராட்சி மன்ற தலைவருமான செந்தில்குமார் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டம் பாபநாசம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக அறுவடை பருவத்தில் இருந்த பல ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டன. பல இடங்களில் மழை நீரில் நெற்கதிர்கள் மூழ்கி நெல்மணிகள் முளைத்து வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சாய்ந்த நெற்கதிர்களை அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது கதிர்கள் பாதியளவுக்கு வயலிலே வீணாகி தங்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

இடையிறுப்பு பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்திக்:-

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டு தொகை போதாது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள தொகை ஏற்கனவே செலவு செய்த தொகைக்கு கூட கட்டுப்படியாகாது. குறுவையை தொடர்ந்து சம்பா பருவத்திலும் மழையால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பருவம் தவறி, யாரும் எதிர்பாராத வேளையில் மழை பெய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. எனவே அறிவித்த இழப்பீட்டை மறு பரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இழப்பீடு

தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமல் நாதன்:-

பாபநாசம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கபிஸ்தலம், அம்மாபேட்டை, சாலியமங்கலம், மெலட்டூா், பண்டாரவாடை, வழுத்தூா், அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த வாரத்தில் பருவம் தவறி பெய்த மழையால் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் உடனே பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும். நெல் அறுவடை நேரங்களில் நெல் அறுவடை எந்திரங்களுக்குக் கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்