கொய்யா மரங்களை வெட்டி சாய்க்கும் விவசாயிகள்

சாணார்பட்டி பகுதியில் கொய்யா விலை வீழ்ச்சியால் விரக்தியில் மரங்களை விவசாயிகள் வெட்டி சாய்த்து வருகின்றனர்.

Update: 2023-01-11 18:45 GMT

கொய்யா விலை வீழ்ச்சி

சாணார்பட்டி வட்டாரத்தில் தவசிமடை, கொசவபட்டி, நொச்சியோடைப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சந்தையில் கொய்யா பழம் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகள் மாற்று விவசாயம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

கிலோ ரூ.6-க்கு விற்பனை

தவசிமடையை சேர்ந்த சரவணக்குமார் என்ற விவசாயி, தனது நிலத்தில் இருந்த கொய்யா மரங்களை வெட்டி அகற்றி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கொய்யா விலை சரிந்து வருகிறது. தற்போது 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.150 என்ற விலையில் விற்பனையாகிறது. அதாவது கிலோ ரூ.6-க்கு விற்பனை ஆகிறது. இது மிகமிக குறைவான விலை ஆகும். கொய்யா ஒரு கிலோ ரூ.20-க்கு மேல் விற்பனையானால் மட்டுமே கட்டுபடியாகும். எனவே தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் தோட்டத்தில் 30 ஆண்டுகளாக வளர்த்த 200 கொய்யா மரங்களை வெட்டி அகற்றி வருகிறோம். வளர்த்த மரங்களை தற்போது வெட்டுவது மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கொய்யா மரத்திற்கு பதிலாக தென்னை நடவு செய்ய முடிவு செய்துள்ளோம். இதேபோல் இந்த பகுதியில் சில தோட்டங்களில் கொய்யா மரங்களை அகற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்