காவிரி டெல்டா பகுதி கடைமடை விவசாயிகளின் பயிர்கள் கருகும் நிலை - ஓ.பன்னீர்செல்வம் ஆதங்கம்
தி.மு.க. அரசின் திட்டமின்மை காரணமாக, பணத்தை போட்டு நேரடி விதைப்பினை மேற்கொண்ட விவசாயிகள் மனமுடைந்து இருக்கிறார்கள் என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திட்டமிடல் இல்லாத தி.மு.க. ஆட்சியில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, காவேரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்ததன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இவ்வாறு நீரினை திறந்து விடுவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் ஏற்படப் போகும் உத்தேச பருவ நிலையை கணக்கில் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். இதனை தி.மு.க. அரசு செய்யாமல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட தால், 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் புழுதி அடித்து நேரடி விதைப்பு பணியை டெல்டா விவசாயிகள் மேற்கொண்டுவிட்டனர்.
ஆனால், நீரின்மை காரணமாக விதைகள் முளைக்காமலும்; நிலத்தடி நீர்மூலம் முளைப்பு கண்ட பயிர்கள் பாதிக்கும் நிலையில் உள்ளதாகவும்; கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை என்றும்; இந்த நிலை நீடித்தால், லட்சக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி விதைப்பு பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க. அரசின் திட்டமின்மை காரணமாக, பணத்தை போட்டு நேரடி விதைப்பினை மேற்கொண்ட விவசாயிகள் மனமுடைந்து இருக்கிறார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.