மேல்அரசம்பட்டு ஆற்றை காணவில்லை குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ஆக்கிரமிப்புகளால் மேல்அரசம்பட்டு ஆற்றை காணவில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-02-24 17:35 GMT

ஆக்கிரமிப்புகளால் மேல்அரசம்பட்டு ஆற்றை காணவில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைவு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

ஆற்றை காணவில்லை

வேலூர் மாவட்டத்தில் காட்டெருமை, காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் வழங்கப்படும் விதைகள் தரமானதாக இல்லை. அவற்றை வாங்கி பயிரிட்டதன் மூலம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் வேளாண் துறைகள் விற்பனை செய்யும் விதை தரத்தை ஆய்வு செய்த பிறகு வழங்க வேண்டும்.

மேல்அரசம்பட்டில் உள்ள ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. 77 மீட்டர் அகலம் கொண்ட அந்த ஆறு, மேல்அரசம்பட்டில் இருந்து ஒடுகத்தூர் வரை வெறும் 5 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள ஆற்றை காணவில்லை. அதனை ஆக்கிரமிப்பு இல்லாத வகையில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டி

ஒடுகத்தூரிலிருந்து குடியாத்தம் உழவர் சந்தைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 3 ஆண்டுகளாக ஓடவில்லை. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு செல்லும் அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும்.

பேரணாம்பட்டு பகுதியில் வனப்பகுதியில் இருந்து தற்போது விலங்குகள் வெளியே வர தொடங்கி விட்டன. இதை தடுக்க காட்டிற்குள் தண்ணீர் தொட்டி ஒன்றை விவசாயி ஒருவர் கட்டி வருகிறார். இந்த தொட்டியை முழுமையாக கட்டி முடிக்க மணல் எடுத்துச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

வேலூரில் இருந்து காட்பாடிக்கு இயக்கப்படும் அரசு பஸ் வள்ளிமலை கூட்ரோடு வரை செல்கிறது. இந்த பஸ்களை காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தத்தில் 25 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கால்நடை சந்தையை திறக்க வேண்டும். பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். அகரம்சேரி ஆறு இணையும் இடத்திலும் தடுப்பணை கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

வனத்துறையினர் அனுமதி

பின்னர் வனத்துறையினர் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் வரக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அறிக்கை தயார் செய்து வருகிறோம். விரைவில் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க சோலார் மின் வசதி ஏற்படுத்தப்படும். மேலும் வன விலங்குகள் வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், பேரணாம்பட்டில் குடிநீர் தொட்டிக்கு மணல் எடுத்துச் செல்ல அனுமதி பெற அவர்களிடம் மனு கொடுக்கவேண்டும். பின்னர் விசாரணை மேற்கொண்டு மணல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றார். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சில மனுக்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்