கடலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
கடலூர் மாவட்டத்தில் உரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.;
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-
ஆகாய தாமரை
வேல்முருகன் (விவசாயி):- சேத்தியாத்தோப்பில் வேளாண்மை விரிவாக்க மையம் கட்டி பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் விதை நெல்லை சேமித்து வைக்க இடமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகவே வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
கலெக்டர்: - சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் 10 நாட்களுக்குள் அந்த கட்டிடத்தை திறந்து எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ரெங்கநாயகி (விவசாயி) :- ராதா வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரையை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க வேண்டும்.
வேளாண்மை துறை அதிகாரி:- மருந்து தெளித்தால் தண்ணீரிலும் பரவி விடும். ஆகவே ஆகாய தாமரையை எந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக விலைக்கு உரம் விற்பனை
மணிகண்டன் (விவசாயி) :- மங்களூர் பகுதியில் 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. அதற்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. உரத்தை தேவையான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும். மற்ற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதை விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றார்.
மேலும் சில விவசாயிகள், அதிக விலைக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
கலெக்டர்:- எந்த கடையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மணிகண்டன்:- மங்களூர் பகுதியில் உள்ள கடைகள் மட்டும் இன்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தான் விற்பனை செய்கிறார்கள். இதை ஆய்வு செய்ய வேண்டும். பட்டா மாற்றம் செய்வதிலும் அதிகாரிகள் காலதாமதம் செய்கிறார்கள்.
கலெக்டர்: வேளாண்மை அதிகாரிகள் இதை நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து எனக்கு தெரியப்படுத்துங்கள். பட்டா மாற்றம் குறித்து நானே நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்.
திருட்டு
சக்திவேல் (விவசாயி) :- வயலில் உழவு செய்து விட்டு டிராக்டரை நிறுத்தினால் திருடிச்சென்று விடுகிறார்கள். டீசல், மின் மோட்டார், ஒயரையும் சேர்த்து திருடிச்சென்று விடுகிறார்கள். இது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தால், புகார் மனுவை வாங்குவதில்லை என்றார். இதையடுத்து மற்ற விவசாயிகளும் எழுந்து தங்கள் பகுதிகளிலும் மோட்டார்கள் திருடு போவதாக குற்றம் சாட்டினர்.
இதை கேட்ட கலெக்டர், விவசாய பொருட்கள் திருடு போவது கேவலமாக உள்ளது. நானும் போலீஸ் அதிகாரியாக இருந்து தான், கலெக்டர் ஆகி உள்ளேன். போலீசார் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீசார் சார்பில் யாராவது கூட்டத்துக்கு வந்து உள்ளீர்களா? என்றார். ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து அடுத்த கூட்டத்துக்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வர வேண்டும் என்றார். இவ்வாறு விவாதங்கள் நடந்தது.