வாய்க்காலில் முளைத்த வெங்காயத்தாமரை செடிகளை அகற்றிய விவசாயிகள்
வாய்க்காலில் முளைத்த வெங்காயத்தாமரை செடிகளை விவசாயிகள் அகற்றினர்.
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே ஆமூர், மணப்பாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் நெல் சாகுபடி விளைநிலங்கள் அப்பகுதியில் ஓடும் குளத்துவாய்க்கால் மூலம் நீர் ஆதாரம் பெற்று விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக குளத்து வாய்க்காலில் வெங்காயத்தாமரை செடிகள் வளர்ந்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் விவசாயிகள் பெரும் சிரமமடைந்து வந்தனர்.
வாய்க்காலில் ஆக்கிரமைக்கப்பட்ட வெங்காய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்து உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் ஆமூர் மற்றும் மணப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பல அணிகளாக பிரிந்து குளத்து வாய்க்காலில் மண்டிகிடந்த வெங்காயத்தாமரை செடிகளை அகற்றினர்.