நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கேட்பதை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் விவசாயிகள் காரசார வாக்குவாதம் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கேட்பதை நிறுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-23 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

பருவமழை தொடங்க உள்ள நிலையில் பசுந்தாள் உர விதைகள் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே அவை உடனடியாக கிடைக்கச்செய்ய வேண்டும். தாட்கோ மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு உழவு மாடு வாங்க கடன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைந்து கடனுதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

வாக்குவாதம்

ஆழாங்கால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும். சிறுவந்தாடு ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. எனவே வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நமது மாவட்டத்தில் சவுக்கு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை. நெல் போட்டாலும் பணம் தருவதில்லை, கரும்பு போட்டாலும் பணம் தருவதில்லை. இதனால் எங்கள் பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பது, அவர்களுக்கு கல்வி கட்டணம் எப்படி செலுத்துவது? என்று விவசாயிகள் பலரும் எழுந்து நின்று அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் புதிய அணைக்கட்டு கட்டப்படவில்லை. பொதுப்பணித்துறை ஏரிகளில் உள்ள முட்செடிகளை அகற்றாததால் அதற்குள் காட்டுப்பன்றிகள் புகுந்துள்ளது. மழைக்காலத்தில் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து வந்ததும் அந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை நாசப்படுத்தும். எனவே அதற்கு இப்போதே உடனடி தீர்வு காண வேண்டும்.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடுவதில் குளறுபடி செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கூடுதலாக கேட்கிறார்கள். இவ்வாறு பணம் வாங்குவதை உயர் அதிகாரிகள் நிறுத்தினால்தான் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் வாங்காமல் இருப்பார்கள், இதனால் ஒவ்வொரு விவசாயியும் வேதனைப்படுகிறோம், ரத்தக்கண்ணீர் விடுகிறோம் என்றுகூறி அதிகாரிகளிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கூட்டத்தில் பெரும் கூச்சலும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே மாவட்ட கலெக்டர் பழனி குறுக்கிட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு கூடுதலாக பணம் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததோடு விவசாயிகளையும் சமாதானப்படுத்தினார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் மேலும் கூறுகையில், சின்னதச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல் செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கும் வகையில் போதிய குடோன் வசதி ஏற்படுத்த வேண்டும். வனத்தையொட்டிய பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் அதிகம் உள்ளது. எனவே அவற்றை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இன்னும் பல இடங்களில் நெல் அறுவடை பணிகள் இருப்பதால் செப்டம்பர் மாதம் வரை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்கள். இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் பழனி, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்