கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் கோஷம்

டெல்டா மாவட்டங்களில் வழங்குவதைபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி குறைதீர் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-17 18:45 GMT

டெல்டா மாவட்டங்களில் வழங்குவதைபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி குறைதீர் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. விவசாய இணை இயக்குனர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நெல்விவசாயம் பாதிக்கப்பட்டு கருகிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசின் நிவாரணமும், மத்திய அரசின் பயிர்காப்பீடு இழப்பீடும் முழுமையாக வழங்க வேண்டும். பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் திடீரென்று எழுந்து கலெக்டரின் முன் திரண்டு முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நிவாரணம்

மாவட்டம் முழுவதும் வறட்சியால் நெல்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டன. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை அளித்து 3 மாதமாகியும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படாமலேயே ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது.

3 போகம் விளையும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கிய நிலையில் ஒருபோகம் விளைவதே அரிதாக உள்ள வேறு தொழில் வளமே இல்லாத ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நிவாரணம் வழங்காதது வேதனை அளிக்கிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.8ஆயிரத்து 762 ஏக்கருக்கு நிவாரணமாக எந்தவித கணக்கெடுப்பும் நடத்தாமல் வழங்கினர். அதேபோல விவசாயிகள் நிலத்திற்கும் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்காமல் அனைத்து நிலங்களுக்கும் வழங்கினர். ஆனால், தற்போது 5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என்றும் அதுவும் எக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே வழங்க பரிந்துரைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது.

அதன்படி பார்த்தால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. இதனை டெல்டா பகுதியை போல ஏக்கருக்கு ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதோடு 5 ஏக்கர் என்ற வரம்பினை தளர்த்தி அனைத்து நிலங்களுக்கும் வழங்க வேண்டும். 5 ஏக்கருக்கு மட்டுமே வழங்கமுடியும் என்றால் மற்ற நிலங்களை விவசாயிகள் விற்றுவிட வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதா என கேட்டு கோஷமிட்டனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுக்கு பரிந்துரை

இதற்கு பதிலளித்து கலெக்டர் கூறியதாவது:- எக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 நிவாரணம் என்பது அரசின் ஆணை. அதன்படி பரிந்துரை செய்துள்ளோம். டெல்டா மாவட்டங்களை போல வழங்கவும், நில உச்சவரம்பினை தளர்த்தவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விவசாயிகளுக்கு எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறோம். விவசாயம் பாதிப்பு குறித்து அறிக்கை அளித்தநிலையில் கூடுதல் விவரங்கள் கேட்டுள்ளதால் அதனை அனுப்பி உள்ளோம். விரைவில் அரசு விவசாயிகளின் நிலைக்கு ஏற்ப நிவாரணம் அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்