விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீடு திட்டம்
பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல், வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதித்திடும்போது, அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.
இத்திட்டம் 2023-24-ம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தின் பயிர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
பதிவு செய்யலாம்
சிறப்பு பருவ நெற்பயிர், ராபி பருவத்தில் நெல் (நவரை), மணிலா, கரும்பு, வாழை, மிளகாய், கத்தரி மற்றும் வெண்டை ஆகிய பயிர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்துகொள்ளலாம்.
கடன்பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், இ-அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். பயிர் காப்பீடு தொகையில் 1.5 சதவீத தொகையையும், ஓராண்டு பயிர்கள் மற்றும் வணிகப் பயிர்களுக்கு 5 சதவீத தொகையையும் விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
பொது சேவை மையங்கள்
இதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும் பொது ஒரு சர்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ தவறான பதிவுகள் என்று நீக்கம் செய்யப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்படி பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்த விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களையோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களையோ அணுகலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.