இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.;
இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம்
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-24-ம் நிதியாண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் 200 ஹெக்டேர் பரப்பளவில் பாரம்பரிய இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வேதியல் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும், நீரும் நச்சுத்தன்மையடைந்து மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இதனை தவிர்க்கும் விதமாக இயற்கையான எருவை பயன்படுத்தி ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குழுவாக சேர்ந்து
2023-24 ம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் தேர்வு செய்யப்பட உள்ள கிராம பஞ்சாயத்துகளில் ஒட்டுமொத்த வேளாண்மை வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடையும் நோக்கத்தில் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்ய விருப்பமுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவாக சேர்ந்து 20 ஹெக்டேர் பரப்பளவுக்கு இயற்கை விவசாய குழுக்களை அமைத்து திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள இருக்கும் விவசாயிகளுக்கு முழுமையாக தங்களது விளைநிலங்களை இயற்கை விவசாய நடைமுறைக்கு மாற்றும் வகையில் 3 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுணர் சுற்றுலா, இயற்கை விவசாய இடுப்பொருட்கள், இயற்கை விவசாய சான்றளிப்பு நடைமுறைகள் மூலம் மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் தொடர்பாக தொழில்நுட்பங்களும், இடுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
50 சதவீத மானியத்தில்
மேலும் இயற்கை முறையில் விவசாயம் செய்வதை உறுதி செய்திடும் வகையில் நிலம் பண்படுத்துதல், இயற்கை விதைகள் கொள்முதல், உயிர் உரங்கள், திரவ உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், அங்கக இடுபொருட்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மற்றும் வேம்பு சார்ந்த அங்கங்க பூச்சி கொல்லிகள் போன்ற பொருட்களுக்கு 50 சதவீத மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அங்கக விவசாயம் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in என்ற வலைத்தளத்திற்கு சென்று இணையதளம் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இணையவழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள் நில உரிமை ஆவணம் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.