நம்மாழ்வார் விருது பெறவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நம்மாழ்வார் விருது பெறவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-29 17:52 GMT

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 1 லட்சத்து 10 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பொதுமக்கள் நஞ்சில்லா உணவு பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியத்தை பேணி காத்திட முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளும் ரசாயன சாகுபடி முறையில் இருந்து மாறி அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கக வேளாண்மை செய்திட வழிகாட்டு நெறிமுறைகள் விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு துறையில் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு முதல், அங்கக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்கும், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை கவுரவப்படுத்துவதற்கும் ஏதுவாக 'அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிக்கு' மாநில அளவில் "நம்மாழ்வார் விருது" வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுடன் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை தமிழக முதல்-அமைச்சரால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 2-ம் பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 3-ம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் வழங்கப்பட உள்ளது. எனவே நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைந்த பட்சம் 1 ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்திருக்க வேண்டும். முழு நேர அங்கக வேளாண்மையில் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அங்கக வேளாண்மையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்