ஸ்ரீமுஷ்ணத்தில் கருகிய நெற்பயிர்களுடன் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அறிவிப்பின்றி மும்முனை மின்சாரம் தடை செய்யப்பட்டதால் நெல் பயிர்கள் கருகின. அந்த கருகிய நெற்பயிர்களுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-13 17:15 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி, எசனூர், குணமங்கலம், ரெட்டிப்பாளையம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம், எவ்வித அறிவிப்பும் இன்றி கடந்த சில வாரங்களாக இரவில் 2½ மணி நேரமும், பகலில் 2½ மணி நேரமுமாக குறைக்கப்பட்டது.

மேலும் எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் முறையாக அறிவிக்கப்படாததால், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிக்கப்பட்டனர். நன்கு வளர்ந்து வந்த நெற்பயிர்கள், மின்தடையால் தங்கள் கண்முன்னே கருகுவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

முற்றுகை

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, நேற்று கருகிய நெற்பயிர்களுடன் ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதால் தற்காலிகமாக இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது.

பழுது நீக்க அவகாசம்

மின்மாற்றியில் 20 ஆயிரம் லிட்டர் ஆயில் மாற்றி, அதன் மூலம் இயக்கி, அந்த ஆயிலை சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி பழுது நீக்க அவகாசம் தேவைப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் மின்தடை சரிசெய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்