பசுந்தீவனம் உற்பத்திக்காக விவசாயிகள் மானிய விலையில் பண்ணை கருவிகள் பெறலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுந்தீவனம் உற்பத்திக்காக விவசாயிகள் மானிய விலையில் பண்ணை கருவிகள் பெறலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்,

Update: 2022-09-27 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வணிக ரீதியாக பசுந்தீவனம் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பசுந்தீவனம்

தூத்துக்குடி மாவட்டத்தின் கால்நடை பராமரிப்புத்துறை மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் 2022-23 மற்றும் ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி இயக்கத்தின் கீழ் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான பண்ணை கருவிகள் கொள்முதல் செய்வதற்கு 25 சதவீதம் (ரூ.10.5 லட்சம்) மானியம் வழங்கி, விவசாயிகளை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.

இதன் மூலம் பருவகாலங்களில் கிடைக்கும் பசுந்தீவன புற்களை அறுவடை செய்து பதப்படுத்தி, வணிக ரீதியாக ஊறுகாய்புல் கட்டுகளாக தயாரிக்கலாம். பின்னர் அவை கோடை காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

ஊறுகாய் புல் மூட்டைகளை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும் அலகு, தெற்கு மண்டலத்துக்கு ஒரு நபருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின்படி ரூ.42 லட்சம் மதிப்பிலான பண்ணைக் கருவிகள் நாள் ஒன்றுக்கு 12 முதல் 30 டன் புல் கட்டும் கருவி, 12 முதல் 30 டன் தீவனபுற்கள் அறுவடை செய்யும் மற்றும் புல் நறுக்கும் கருவி, 60 எச்.பி முதல் 70 எச்.பி திறன் கொண்ட டிராக்டர் கொள்முதல் செய்வதற்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இதன் மூலம் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 200 டன் பசுந்தீவனம் வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய இயலும். இதனை 320 ஏக்கர் நிலத்தில் இருந்து உற்பத்தி செய்யலாம். பயனாளி தனது சொந்த நிலத்தில் இருந்து அல்லது பிற விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் பசுந்தீவனம் கொள்முதல் செய்யலாம்.

எனவே இந்த திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள பால் உற்பத்தியாளர்கள் தனிநபர்கள், மகளிர் சுய உதவிகுழுக்கள், கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்து மானிய விலையில் கருவிகளை பெற்று பயன்பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர் 5 ஆண்டுகள் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்