சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.;

Update:2023-11-21 23:20 IST

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ கைவிட வேண்டும், திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, தமிழ் பேரரசு கட்சி நிறுவனர் வ.கவுதமன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்கள் மூலம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச்சென்றனர்.

போராட்டத்தின் போது பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் நலனில் அக்கறையின்றி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் என்ன குண்டர்களா? எதற்கு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். நியாம் கேட்டு போராடும் விவசாயிகள் போலீசார் மூலம் கைது செய்யப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்