நிலக்கடலையில் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

காலம் தவறி பெய்த மழையினால் நிலக்கடலையில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2022-08-09 19:04 GMT

காரியாபட்டி, 

காலம் தவறி பெய்த மழையினால் நிலக்கடலையில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நிலக்கடலை சாகுபடி

காரியாபட்டி அருகே உள்ள சாலைமறைகுளம், அல்லாளப்பேரி, சொக்கனேந்தல், ஆவியூர், அரசகுளம், குரண்டி, சித்தனேந்தல் மற்றும் நரிக்குடி ஒன்றிய பகுதிகளில் உள்ள இசலி உழக்குடி, பனைக்குடி, நாலூர், வீரசோழன், ஒட்டங்குளம், அழகாபுரி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த சித்திரை மாதத்தில் விவசாயிகள் பயிரிட்ட கடலைச்செடிகளை 90 நாட்களுக்கு பதில் 120 நாட்கள் கழித்து பிடுங்கினாலும் விளைச்சல் குறைவாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

விளைச்சல் பாதிப்பு

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நிலக்கடலை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் நிலக்கடலையை சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம்.

இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலம் தவறி பெய்து வரும் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

தற்போது கிலோ ரூ.70-க்கு எங்களிடம் இருந்து வாங்கும் வியாபாரிகள் அதனை ரூ.130 வரை விற்கின்றனர்.

உரிய விலை கிடைக்காததாலும், மகசூல் குறைந்ததாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், நிலக்கடலைக்கு போதுமான விலை நிர்ணயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்