விவசாயிகள் நில ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டுகோள்

பிரதமரின் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் நில ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-07-28 16:49 GMT

பிரதமரின் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் நில ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் நிதியுதவி திட்டம்

தமிழகத்தில் விவசாயிகளுக்கான பிரதமர் நிதியுதவி திட்டம் (ஊக்கத்தொகை) செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வேளாண் இடுபொருட்களை உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கும், இதர தேவைகளுக்காகவும் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர்.

நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணையாக இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்த ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

நில ஆவணங்கள்

தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு இந்த மாதம்(ஜூலை) 31-ந்தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்த்து கொள்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக நடைபெற்று வருகிறது. எனவே இத்திட்டத்தில் பயன் பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களை பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகலுடன் தாங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் சமர்ப்பித்து நிலம் இருப்பதனை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உடனே ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன் பெற்றிடலாம்.

இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்