சவுடு மண் குவாரியை மூடக்கோரி விவசாயிகள் போராட்டம்

நரிக்குடி அருகே சவுடு மண் குவாரியை மூடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-23 18:00 GMT

காரியாபட்டி, ஜூலை.24-

நரிக்குடி அருகே சவுடு மண் குவாரியை மூடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்குவாரி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உழுத்திமடை ஊராட்சி, உச்சனேந்தல் கிராமத்தில் சவுடு மண் குவாரி அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருஞ்சிறை, உழுத்திமடை, கட்டனூர், வீரசோழன், மினாக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருதுமால் நதி நீர் பாசன விவசாய சங்க பொதுச்செயலாளர் அர்ச்சுனன், துணைச் செயலாளர் உறங்காபுலி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உச்சனேந்தல் கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சவுடு மண் குவாரியை மூடக்கோரி முற்றுகையிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் கிருதுமால் நதி பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் உழுத்திமடை, உச்சனேந்தல் கட்டனூர், இருஞ்சிறை உள்பட பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் உச்சனேந்தல் சவுடு மண் குவாரியை நேற்று முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட கிருதுமால் பாசன விவசாய சங்க நிர்வாகிகளிடம் திருச்சுழி தாசில்தார் சிவக்குமார், அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சகாய ஜோஸ், நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூட வேண்டும்

பேச்சுவார்த்தையில் விவசாய சங்கத்தினர் இந்த பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சவுடு மண் குவாரியை உடனடியாக மூட வேண்டும், குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அப்போது திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு இது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்