சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சாலையோரம் இருந்த 27 மரங்களை வெட்டும் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாய சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை சாலை விரிவாக்க பணிக்காக 800 மரங்கள் வெட்டப்பட்டு இது நாள் வரை ஒரு மரம் கூட நட்டு பராமரிப்பு செய்யவில்லை எனவும், இதேபோல் இந்த மரங்களை வெட்டினாலும் ஒரு மரம் கூட நட போவது இல்லை என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.