குறைகேட்பு கூட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் குறைகேட்பு கூட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-03-13 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நுழைவு வாயிலில் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் லூர்துசாமி தலைமை தாங்கினார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் கலியபெருமாள், தங்க தனவேல், அலெக்ஸ், பாலு உள்ளிட்ட விவசாயிகள் பலர் எழுந்து விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தை கூட்ட அரங்கில் நடத்தாமல் நுழைவு வாயிலில் ஏன் நடத்துகிறீர்கள். கூட்டத்தில் அதிகாரிகள் அமர்ந்திருப்பது எங்களுக்கு தெரியவில்லை.

இப்படி அதிகாரிகள் ஒருபுறமும், விவசாயிகள் ஒருபுறமும் அமர்ந்திருந்தால், நாங்கள் எப்படி அதிகாரிகளிடம் குறைகளை கூற முடியும். விவசாயிகளான எங்களை நீங்கள் மதிக்கவில்லை என கூறி சப்-கலெக்டர் லூர்துசாமியை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், அதிகாரிகள் கூறுகையில், கூட்ட அரங்கில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.. அதனால் தான் இங்கு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர். இருப்பினும் அதனை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து கூட்ட அரங்கு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு குறை கேட்புகூட்டம் தொடங்கியது.

விவசாயிகளுக்கு இழப்பு

அதனை தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கூறுகையில், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இரவு நேரங்களில் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் சிலர் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்மூட்டைகளை வாங்கி அதனை வெளியில் உள்ள வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் நெல் எடை போடும்போது அங்குள்ள ஊழியர்கள் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவதால் அதிக தானியங்கள் வீணாக கீழே விழுந்து சிதறுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

சோலார் மின்வேலி அதிக விலைக்கு விற்பனை

வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க மானிய விலையில் சோலார் மின்வேலி தரப்படுகிறது. ஆனால் இதனை ஒரு குறிப்பிட்ட கம்பெனி அதிக விலைக்கு விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதனால் நாங்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகிறோம் என்றனர். அதனை கேட்ட சப்-கலெக்டர் லூர்துசாமி, உங்களது குறைகள் அனைத்தையும் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்