கோட்டூர் வேளாண்ைம விரிவாக்க மைய அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
கோட்டூர் அருகே மாவட்டக்குடி ஊராட்சியில் 2022-2023-ம் ஆண்டில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து-பயறுகளுக்கு தமிழக அரசால் எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்த நிவாரணம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நேற்று காலை கோட்டூர் வேளாண்மை விரிவாக்கமைய அலுவலகம் முன்பு விவசாயி ஹரிகிருஷ்ணன் (வயது52) தலைமையில் 15 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் கோட்டூர் வேளாண்மை அலுவலர் சிவதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வருகிற 20.4.23-ந்தேதி மாலை 4 மணிக்கு கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து வேளாண்மை அலுவலர் எழுத்து மூலமாக எழுதி கொடுத்ததின் பேரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.